Tuesday, January 5, 2016

வாசம்... நுகரும் சக்தி...  இது இரண்டும் இல்லையென்றால் வாழ்கை வாசமே இல்லாமல் போயிருக்கும். நம்மில் பலர் பல விஷயங்களை வாசத்தை  கொண்டு அடையாளம் காண்பது உண்டு. உதாரணதுக்கு தாத்தாவின் வாசம்., ஊரின் வாசம், சாப்பாட்டின் வாசம், ஹாஸ்டல்  வாசம். பெட்ரோல் வாசம், குழந்தையின் வாசம், புதிய செருப்பு, சீப்பு, பேனா, தீப்பெட்டி, ரெயின் கோட் , குடை, திரை சீலை, வயல், கடல், பணம், மண், குளிர், குடம்  இப்படி வாசத்துக்கு வாசம் இடமும் பொருளும் வயதும்  மாறிக்கொண்டே இருக்கிறது.  பெரும்பாலும் நம் மனதில் அதிகம் இடம் பெற்றவை பாடல்களும் வாசமும் தன். சில நேரங்களில் ஆண்டுகளும் வயதும் எப்படி போகிறதென்பது  வாசத்தையும் பாடல்களையும் வைத்து தன் நினைவு கூற வேண்டி இருக்கிறது.  இப்படி  வயதும் வாசமும் அருகருகே இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 

 உதாரணம் புதிய யூனிபோர்ம் , புத்தகங்கள் உங்களை உங்கள் பள்ளிக்கே அழைத்து செல்லும். மண்ணெண்ணெய் , கரி அடுப்பின் வாசம்,  வேப்ப மரத்து காய் , புளியம்பழத்தின் நார்,காய்ந்து உலர்ந்த சருகுகள் காற்றில் பறக்கும் வேப்பம்பூக்கள் , மர பெஞ்சுகள், இரும்பு நாற்காலிகள்,சைக்கிள் டயர், பெவிகால் , கண்மாயில் தேங்கி நிற்கும் தண்ணீர், அரசு மருத்துவமனையில் குடுக்கும் டானிக் , புதிய போர்வை, கொசு வர்த்தி இவையெல்லாம் நீங்கள் 1980 டு 1990 ல் பிறந்தவர்களா இருந்தால் உங்கள் குழந்தை பருவத்தை நினைவூட்டும். 

ஊதுபத்தி , புத்தாடை பைகள், சட்டை காலரின் இடையே வைக்கும் அட்டையின் வாசம், முறுக்கு, அதிரசம், வெடி மருந்து, கம்பி மத்தாப்பு, நல்லெண்ணெய், சீகைக்காய், வாழ்த்து அட்டை இவை எப்பொழுது உங்கள் மூக்கை கடந்தாலும் தீபாவளியின் வாசம். 

பேரிக்காய் என்றால் விநாயகர் சதுர்த்தி, பொங்கலும் சுண்டலும் மணந்தால் அது மார்கழி, வாழைமரத்தின் வாசம் ஆயுத பூஜை, இஞ்சியும், பூசணியும், ஏலமும், சுக்கும் தை மாதம் பொங்கல், பிரியாணி என்றல் ரம்ஜான், கேக் மற்றும் வண்ண காகிதங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர், இப்படி பண்டிகைகளும் வசமும் ஒன்றாக கலந்து இருப்பது இயல்பே. 

மனிதர்களின் வாசம், இதை நீங்கள் கண்டுபிடிக்க ஆரம்பித்து விடீர்கள் என்றால் உங்களுக்கு இயற்கையாகவே துப்பறியும் நிபுனராகக்குடிய அணைத்து குணங்களும் உள்ளது என்று அர்த்தம். பலர் சாதாரணமாக கேட்பதுண்டு. அப்பா வந்துட்டு போனாரா ? சித்தப்பா உபயோகபடுத்தின போர்வையா?, தாத்தா படுத்த பாயா ? இது ஒரு நிலைக்கு மேல் மேலே சென்று இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்ய வைக்கும் உதரணத்துக்கு யாரோ பிரியாணி சாப்படு வந்துருகாங்க, யாரு சிகரட் புடிச்சுட்டு வந்தது, இந்த கூடத்துல யாரோ குடிச்சுருக்கான் , யாரந்த தலை வலி தைலம்

இப்படியாக வயதும், இடமும், பொருளும், குணமும், மனிதர்களும் வாசத்தை  கொண்டு அடையாளம் காணும் குணாதிசயம் சிறு வயதில் இருந்தே பழக்கமாகிவிட்டது. 

இன்னும் என்னால் இந்த மோப்பம் பிடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை, சிவகங்கையில் வீட்டு தோட்டத்தில் தென்னை மரத்தின் வாசம் கண்ட நான், மதுரை புறநகர் வீதிகளில் விற்கும் மல்லிகை பூ, திருப்பத்தூர் கல்லூரியின் மரங்களின் வாசம், சென்னை ஸ்பென்சர்ஸ் மற்றும் அலுவலகங்களில் நுகரப்பட்ட டிஜிடல் மற்றும் பெர்பூம் வாசங்கள், திருச்சியில் காவேரி பலத்தில் உள்ள தண்ணீரின் வாசம், இப்பொழுது சற்று கடல் கலந்து வந்து துபாய் சாலைகளின் வாசம் என்று நுகர்ந்து கொண்டிருக்கிறேன். வாசமும் வாழ்கையும் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது... இன்னும் நுகர காத்து இருக்கிறேன்... 

No comments:

Post a Comment